Tuesday, July 2, 2019

பருவத்தே தமிழ் செய்வோம்!

முனைவர் மா.பூங்குன்றன் பதிப்பாசிரியர்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம்


மொழித் தொல்லியல் (Linguistic Archeology) என்ற புதிய மொழியியல் துறையின் ஆய்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, உலகில் மொழி தோன்றிய காலத்திலேயே தோன்றிய மொழி தமிழ்மொழி என்பது இன்னும் தெளிவாகிறது. மொழிப் பதிவுகளில் முற்பட்டதாகக் கூறப்படும் பாறை ஓவிய எழுத்துகள், மட்பாண்டக் கிறுக்கல் எழுத்துகள் தமிழ்மொழி எழுத்துகளாக அடையாளம் கண்டறியப்படுகின்றன. அவற்றிற்கு ஒலிப் பொருத்தம் ((Photonic Value) கொடுத்து மொழிப் பனுவலாக்கம் (Decipherment) செய்யப்படுகின்றன. சிந்துவெளி போன்ற புதையுண்ட நாகரிகங்களில் கிடைக்கும் மொழிசார் தொல்பொருள்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் சொற்களும், தொடர்களும் தமிழ்மொழியில் ஒப்பீடு செய்து தமிழாகப் படிக்கப் பெறுகின்றன; அவை தமிழ்மொழிதான் என நிறுவப்படுகின்றன.

அதேநேரத்தில், உலக வரலாற்றில் புகழ்பெற்ற பல பேரரசுகளோடு பரவலாக ஆட்சி செய்த பழம்பெரும் மொழிகள் பல, இன்றைக்கு மக்கள்வழக்கிழந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால், தமிழ்மொழி இன்றும் மக்கள் வழக்கிலும் பயன்பாட்டிலும் வளமாக வாழ்ந்துகொண்டுள்ளது. அதற்குக் காரணம் தமிழ்நாட்டை ஆண்ட அன்றைய தமிழ்ப் பேரரசுகள் கழகம் வைத்து இலக்கியங்களை உருவாக்கியும் தொகுத்தும் தமிழ் வளர்த்துள்ளனர். தொடக்க காலத்தில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில் வாழ்ந்துவந்த தமிழ், இன்றைய அறிவியல் உலகத்தில் நூல் வடிவிலும், கணிப்பொறியிலும் தன்னைத் தக்கவைத்துள்ளது. ஒருங்குகுறி வழக்குக்கு வந்ததன் விளைவாகத் தொடர்ந்து பதிவுகோல்(Pen drive),இணையம், முகநூல், கீச்சகம்(Twitter), புலனம் (Whatsapp) எனப் பலவற்றின் பயன்பாடுகளிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு உலா வருகிறது. மக்களின் வழக்கிலும் கருத்திலும் பதிவிலும் இடம்பெற்று, இத்தொழில்நுட்பக் காலத்துக்கேற்ற ஏராளமான கலைச்சொற்களின் உருவாக்கத்திற்குத்தகச் சொல்வளத்தைப் பெருக்கிக் கொண்டுள்ள மொழி தமிழ்மொழி. இவ்வாறான தொடர் பயன்பாட்டுடன் உலக மொழிகளிலேயே நீண்ட நிலைத்த வாழ்நாளைப் பெற்றதோர் அரிய மொழியாகத் தமிழ் விளங்குகிறது.

இம்மொழியின் நீண்டகாலத் தொடர்ச்சிக்குத் தமிழ் மக்களால் வழங்கப்பட்டு வரும் பேச்சு வழக்கும், பல்வேறு இயல், இசை, நாடகக் கலை வடிவங்களும் கழகக்காலம்முதல் இக்காலம்வரை தொடர்ந்து வரும் பல்வேறு இலக்கிய வடிவங்களும்தாம் உறுதுணையாக இருந்து வருகின்றன.

மாந்தர்இனம் தோன்றிய காலத்திலிருந்து மொழிகள் பலவும் தோன்றிக் கொண்டும் அழிந்துகொண்டும் இருக்கும் நிலையில் தமிழ் மொழியின் இந்த நீண்டகால இருப்புக்கு மொழியியல் காரணங்கள் பலவும் கூறப்படுகின்றன.

தனக்கு வேண்டிய சொற்களுக்குத் தமிழ் தம் வேர்மூலத்தைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்கிக்கொண்டு தன்னிறைவுபெற்ற மொழியாகவும், தனித்தியங்கவல்ல மொழியாகவும் விளங்குகிறது. அது மட்டுமல்லாமல், பிற மொழிகளுக்கும் தன் வேர்மூலத்தையும் சொற்களையும் நல்கி வந்துள்ளது. பிறமொழிகளிலிருந்து சொற்களையும், இடைக்காலமாகப் பெயர்ச்சொற்களைப் பெற்றாலும், அவற்றை இரவல்சொற்களாகக் கொண்டு தமக்கென உடனே புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளுமே ஒழிய நிலையாக அவற்றைச் சேர்த்துக் கொள்ளும் பண்பு தமிழுக்கு இல்லை. மொழியில் பல சொற்களையும் உருவாக்கிக் கொள்ளும் கூறான வினைச்சொற்களை இரவல்பெறும் அமைப்புத் தமிழுக்கு அறவே இல்லை. இவ்வாறு பிறமொழிக் கலப்பைத் தவிர்த்து வந்ததே, தமிழின் நெடுங்கால வாழ்வின் நிலைப்புக்கு ஒரு பெருங்காரணமாகக் கூறமுடிகின்றது. அவ்வாறே சில சொற்களை ஏற்றுக் கொள்ள நேரின் அவை திரிபுற்று வேற்று மொழியாகப் போய்விடும் நிலைதான் நிலவுகிறது.

ஒரு மொழியின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயர்நிலையில் மொழியைக் கையாளும் அறிஞர்களும் படைப்பாளர்களும் மட்டுமல்லாமல் அதைப் பல்வேறு கருத்தூட்டத்திற்கும் நடைமுறையில் பயன்படுத்தும் அடிப்படை மக்கள் தொகையும் ஒரு முகாமையான கூறாகும். அந்த வகையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் நெடுங்காலமாகத் தமிழைத் தங்கள் வாழ்க்கை மொழியாகவும், பேச்சு வழக்கு மொழியாகவும் போற்றி வந்துள்ளனர்.

மக்களை வழி நடத்தும் அரசும் மொழிகாக்கும் கூறாக விளங்குகிறது. ஓர் அரசு எண்ணினால் ஒரு மொழியை நலிவிக்கவும் வளர்க்கவும் மீட்கவும் முடியும் என்பதற்கு உலகில் வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன.

அந்த வகையில் மொழியையும் மக்களையும் ஒன்றிணைத்துக் காத்த - மொழியைப் போற்றி வளர்த்த மன்னர்கள் தமிழ்கூறு நல்லுலகத்தில் அமைந்தனர் என்பதைத் தமிழ் மொழியின் நெடிய வரலாறு உணர்த்துகிறது.

அதன் பயனாகத்தான் தமிழ்மொழி இக்காலம்வரை நீடித்து, செழித்து இயங்கி வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கும் இயல், இசை, நாடகக் கலை வடிவங்களுக்குத்தக அறிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும், மக்களுக்கும், தொழில்நுட்பத்திற்குத்தக வல்லுநர்களுக்கும் கைப்பாவையாக வளைந்தும் குழைந்தும் துணையாக இருந்து தன்னளவில் தமிழ் வளர்ச்சி பெற்றுக்கொண்டு வருகிறது.

இன்றைய காலம் இலக்கிய வளர்ச்சிக்குமேல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் மிக்கிருக்கும் காலம். அதற்குத்தக மொழி தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு ஈடுகொடுக்க வேண்டிய காலம். மக்களும், அறிஞர்களும் மட்டுமே மொழி வளர்ச்சியில் அக்கறை காட்டினால் போதாது. அரசும் இக்காலத்தில் மொழி வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும்.

குறைவான மொழி வளர்ச்சியே போதும் என்கிற நிலையிலும், அந்நாளில் அரசே மொழியைப் பேணிவளர்த்த காலம் அக்காலம். மொழி வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ளவும் மொழியைப் பேணவும் தவறிய பேரரசுகளின் விளைவால் வளமான பல மொழிகளையும் இந்த உலகம் இழந்துபோனது. அவை சார்ந்த இனங்களும் அழிந்தன. இன்றைக்குத் தமிழும் இருக்கிறது; தமிழினமும் இருக்கிறது என்றால் அன்றைய அரசுகளின் மொழி போற்றுதல்களே முதன்மைக் காரணமாகும்.

அரசு எண்ணினால் உலகில் அழிந்துபோகும் நிலையிலும்கூட மொழியை மீட்டெடுத்துவிட முடியும் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. ஈபுரு மொழியே அதற்கு உலகறிந்த சான்று.

ஈபுரு மொழி முற்றழிவின் விளிம்பில் ஒட்டியிருந்த நிலையில், ஈபுரு மொழியைத் தெரிந்த ஒரு சில முதியவர்கள் மட்டுமே வாழ்ந்திருந்தார்கள். அவர்களை வைத்துக்கொண்டு அன்றைய இசுரேல் மன்னன் மொழிப் பாடத்திட்டத்தை உருவாக்கி, இளம் பிஞ்சுக்குழந்தைகளுக்கு மொழிக்கல்வியைப் புகட்டினான். அந்நாட்டிலே அழிந்துவிட்ட, யாருக்கும் தெரியாத தங்கள் தாய்மொழியை அந்த இனமே, அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் வழியாகத்தான் பெற்றுக்கொண்டது. குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்வரை காத்திருந்த வீட்டிலிருக்கும் தாய்மார்கள் அந்தக் குழந்தைகள் வந்தவுடன் அவர்களை வாரியணைத்ததுடன், அவர்களிடமிருந்து அன்றன்றைக்கும் அவர்கள் கற்றதைத் தெரிந்துகொண்டு, அண்டை அயலாருடனும், தங்களுக்குள்ளும் பேசிப்பழகி அந்நாடே அந்தமொழியைக்கற்றுமீட்டுக்கொண்டது. தாயிடமிருந்து குழந்தைகள் கற்கவேண்டிய தாய்மொழி, இதற்கு மாறாகக் குழந்தைகளிடமிருந்து தாய்மார்கள் கற்றுக் கொண்டதன்வழி அம்மொழி மீட்டெடுப்புச் செய்யப்பட்டது. இன்றைக்குக் கணினித் தொழில்நுட்பம் வளரவளர அந்த மொழியும் அவற்றில் இணையாக வளர்ச்சி பெற்று உயர்மொழியாக உலகில் உலவுகிறது. தமிழ்மொழிபோல் நீண்ட வளர்ச்சியைக் காட்டவல்லதான அம்மொழியை இன்றைக்கு மொழியறிஞர் மா.சோ.விக்டர் அவர்கள் தமிழ் மொழியுடன் ஒப்பீடு செய்து ஆய்வுசெய்கிறார் என்றால், இன்றைக்கு ஈபுரு மொழி வாழும்மொழியாகி விட்டதுதான் காரணம்.

இன்றைக்குச் சமற்கிருதம் மக்களின் பேச்சுமொழியாக இல்லாத நிலையில், வாழும் மொழிகளோடு தம் சொற்களைக் கலப்புச் செய்தால் மட்டுமே, அந்த மொழியோடு இணைந்து மக்கள் வழக்கில் வாழக்கூடிய நிலை - வளரமுடியும் என்கிற நிலை. எனவேதான் இடைக்காலத்திலும் இப்போதும் தமிழ்மொழியோடு கலந்து எழுதும் வழக்கத்தைத் திணித்தனர். ‘மணிப்பிரவாள’ நடையை உருவாக்கினர். அவ்வாறே அம்முறை வளர்ச்சி பெற்றிருந்தால் இன்றைக்குத் தமிழ் இருந்திருக்காது. மொழிக் கலப்பினால் ஒரு மொழி வளரத்தான் செய்யும் என்று தலைகீழ்ப் பாடம் பயிற்றினர்.

மறைமலையடிகள் தோற்றுவித்தத் ‘தனித்தமிழ் இயக்கம்’, அதன்பின் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் அரும்பாடுபட்டு இந்த அளவில் அந்த இயக்கத்தை நிலை நிறுத்தியிருக்கவில்லையானால் தமிழ்மொழியே அழிவை நோக்கிச் சென்றிருந்திருக்கும். தமிழினத்திற்கும் அதே நிலைதான் எட்டியிருக்கும்.

தனித்தமிழ் இயக்கம் தோன்றிய காலம் தமிழை மீட்டெடுப்புச் செய்த காலம். அதன்பின் இந்தித் திணிப்பை எதிர்கொண்டு தமிழுணர்வைப் புதுக்கியது ஒரு காலம். இந்தியெதிர்ப்பை முன்வைத்து, தமிழுக்கு நலம் செய்ய திராவிடக் கட்சிகள் அரசேறியது ஒரு காலம்.

தமிழ் வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப்பெற்று, எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று முழங்கப்பெற்றது. தமிழுக்கான ஆக்கப் பணிகள் பல செய்யப்பெற்றன. அடுத்தடுத்த ஆட்சிகளில் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் மாநாடுகள், தமிழ்க் கழகங்கள் உருவாக்கப் பெற்றன. ‘தமிழ் வாழ்க, தமிழ் வெல்க’ என்றெல்லாம் அரசு அலுவலகங்களில் ஒளிர்விளக்குகள் மிளிர்ந்தன. ஒளிர் விளக்குகள் பேணுகையின்றி ஓரோர் எழுத்து உதிர்வது போன்று நாளடைவில் தொடர்ந்து தமிழ்மொழிக்கு ஆக்கப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பேரறிஞர் அண்ணா போன்ற தமிழுணர்வுகொண்ட தலைவர்கள் ஓய்ந்தபின், தமிழ் வளர்க்கும் அரசு அலுவலகங்கள், அப் பணியைத் தமிழுணர்வோடு செய்யாமல், வாலாயமான (வழக்கமான) நடைமுறையைப் பணியோடு பணியாகச் செய்ய த் தொடங்கின.

இடையில் எழுந்த எழுச்சிகளெல்லாம் சிறிது சிறிதாகப் பின்னடைவுற்றன. “இந்தித் திணிப்பை எதிர்ப்பதே தமிழைக் காப்பதற்காக என்று அல்லாது ஆங்கிலத்திற்கு வழிவிடுவதற்குத்தான்” என்ற நிலையில் ஆங்கிலத்தின் ஊடுருவலும் கலப்பும் அதிகமாயின. தமிழ்வழிக்கல்வி படிப்படியாக நெகிழ்ந்துபோனது. தனியார் பள்ளிக்கு வழிவிட்டு ஆங்கிலவழிக் கல்வியே கோலோச்சியது. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலமே நுழைந்தது. ஆங்கிலமே ஆட்சி மொழி, வழக்குமன்ற மொழியானது. தமிழ் கல்விமொழி, வழக்குமொழி, வழிபாட்டு மொழி எனத் தமிழுக்கு எங்குமே இடம் இல்லாமல் போனது. ஊடகத் துறையிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழில் பேசுதல் இழிவாகக் காட்டப்பட்டது. அதன் தாக்கத்தால் மக்கள் பேச்சு மொழியிலும் தமிழ் மெலிவு பெற்றது. தமிழாசிரியர்கள்கூடத் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் படிக்க வைப்பதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள்கூட, தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதில்லை. பகட்டான ஆங்கிலவழித் தனியார்ப் பள்ளிகளை நாடத் தொடங்கிளர்.

அந்த அளவில் அரசுப் பள்ளிகளும் தரத்தை இழந்துவிட்டதாகக் கருதப்பட்டன. தமிழின் நிலைப்பாடு குறைந்ததுபோல் தமிழ்நாட்டு அரசின் சார்பில் இயங்கும் அரசுத் துறைகள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் என அனைத்தும் தரமிழந்து மதிப்பிழந்துபோயின.

எந்தத் தேசிய இனத்தின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டாத இந்திய அரசு, இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியையும் சமற்கிருதத்தையும் எல்லாத் துறைகளிலும் நுழைத்துக் கொண்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள்தாம் எச்சரிக்கையாக இருந்து அவரவர் மொழியைக் காத்துக் கொள்ளவேண்டிய நிலை. தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் தள்ளாட்ட நிலைதான் நிலவுகிறது.

இந்நிலையில் ஏதாவது ஒரு சிறு தீப்பொறி கிடைக்காதா என்று காத்திருக்கும் நிலைதான் தமிழ்நாட்டின் நிலையாக இருந்தது. பாவலரேறு ஐயா கூற்றுப்போல், “உமி மலையில் ஓரரிசி காண்டற்றால்...” என்ற நிலைதான் நம்நிலை. ஒரு தனி மாந்தரை நம்பிக் காத்திருக்கவில்லை. ஆனாலும் இந்த மொழியையும் இந்த இனத்தையும் மீட்டெடுக்கக்கூடிய ஒரு முயற்சியைத் தமிழக அரசு எடுக்கவேண்டும் என்று தமிழினமே காத்திருந்தது.

நெடுநாளைக்குப்பின், தமிழ் வளர்ச்சித்துறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கென புதியபுதிய திட்டங்களை ஏற்றுக் கொள்வதுடன் அதைச் செயற்படுத்த அறிவியல் வழியிலும் ஆக்கவழியிலும் சிந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நடைமுறை நீடிக்க வேண்டுமே, செயல்பட வேண்டுமே என்று எண்ணி அங்காப்புடனும் எதிர்பார்ப்புடனும் நாம் காத்திருக்கிறோம்.

மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழியில் உள்ள அனைத்துச் சொற்களையும் திரட்டி ஒரு தரவகம் (Corpus) அமைப்பதும், அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்குத்தகப் புதிய தமிழ்க் கலைச்சொற்களை (Technical Terms) உருவாக்கிச் சொற்களைப் பெருக்குவது முகாமையானதும் முதன்மையானதுமாகும்.

தமிழ் வளர்ச்சி அமைச்சகத்தின் ஒரு துறையான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம், கடந்த சில மாதங்களாகப் பல்வேறு துறைசார்ந்த பிறமொழிச் சொற்களுக்கு இணையான புதிய கலைச்சொற்களை வடிவமைத்து, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கென வழங்கும் பணிகளில் மும்முரம் காட்டிவருகிறது. 1974இல் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்துறை 2011இல் பேரகரமுதலிப்பணியை நிறைவுசெய்து 31 பெருந்தொகுதிகளை வெளியிட்டது.

ஆக்சுபோர்டு அகரமுதலி (Oxford University Dictionary) எவ்வாறு ஆங்கிலமொழிக்கு அதிகாரம் படைத்த அமைப்போ, அவ்வாறே இறுதியாக அண்மையில் தமிழ்மொழிக்குப் பேரகரமுதலிப்பணியை நிறைவுசெய்த இயக்ககம் என்ற வகையில் தமிழ்மொழிக்கு அதிகாரம் படைத்ததாக விளங்கத் தகுதியானது. தமிழ்மொழியில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் பதிப்புத் துறை அறிவித்தது. அதனுடன் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழி பேராசிரியர் அருளி வெளியிட்ட ‘அருங்கலைச்சொல் அகரமுதலி’, இணையக்கல்விக்கழகம் வெளியிட்ட ‘தமிழ்க் கலைச்சொற்கள்’ 14தொகுதிகள் ஆகிய அனைத்தையும் சேர்த்து, நாளிதுவரை தமிழ்மொழியில் உள்ள மொத்தச்சொற்களின் புள்ளிவிளக்க எண்ணிக்கையைத் தொகுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ் மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் திரட்டித் தமிழ்மொழித் தரவகம் (Tamil Language corpus) உருவாக்குதலே தமிழ் வளர்ச்சியின் முதற்பணியாகும் எனத் தமிழ் வளர்ச்சிப்பிரிவின் கீழ் இயங்கும் அனைத்துத் துறைக் கலந்துரையாடல் ஆய்வுக்கூட்டத்தில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், தமிழ் வளர்ச்சித்துறையின் மாண்புமிகு அமைச்சருக்கு முதல்கோரிக்கையாக வைத்தது. இப் பணிகளைக் கண்ணுற்ற மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராசன் அவர்கள் அது தொடர்பாக மூன்று திட்டங்களை உருவாக்க வழியமைத்தார். அவை பின்னர் விரிவடைந்தது என்றாலும் அம் மூன்றும் முத்தாய்ப்பானவை.

1.தமிழ் மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் திரட்டி ‘தமிழ்ச் சொற்குவை’ என்ற பெயரில் தமிழ்மொழித் தரவகம் (Tamil Language corpus) உருவாக்குதல், பயன்பாட்டுக்குத்தக அன்றாடம் உலகில் உருவாகும் அறிவியல் மற்றும் பிறதுறைகளின் கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்கித் தமிழ்மொழிச் சொற்களின் எண்ணிக்கையை இப்போது உள்ளதினும் பன்மடங்காக உயர்த்துதல்.(இப்போது மைசூரில் அமைந்துள்ள மொழியியல் நிறுவனத்தின் தரவகம், தமிழில் 30 இலக்கம் சொற்கள் உள்ளன எனக் கணக்கிட்டுள்ளதாகத் தனியார் அகரமுதலி ஒன்று கூறுகிறது.)

2.உலகத்தில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கைப் பட்டியலின்படி 14 - ஆம் இடத்தில் இருப்பதாகப் புள்ளி விளக்கம் கூறுகிறது. தமிழ் பேசத்தெரியாத தமிழர்கள் உலகின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். வெளியினத்தவர் பலர் தமிழ்கற்க விரும்புகின்றனர். அவர்களுக்கெல்லாம் தமிழ்கற்பித்து, மேற்கண்ட தமிழ்பேசுவோர் பட்டியலின் எண்ணிக்கையை 10ஆம் இடத்திற்குக் கொண்டுவரும்படி அதன் எண்ணிக்கையை உயர்த்துதல்.

3.உலகில் 188 நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். அங்கெல்லாம் தமிழ்க் கழகங்கள் உள்ளன. இவற்றுடன் இணைந்து உலக நாடுகளில் இந்திப் பரப்புக்கழகம் (இந்திப் பிரசார சபை) போல் தமிழ் வளர்மன்றங்களை இந்திய ஒன்றிய அரசின் துணை கொண்டு அமைப்பதற்கு அனைத்துச் செயற்பாட்டையும் உருவாக்குவது.

இம்மூன்று திட்டங்களைத் தமிழ் வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளின் கலந்துரையாடல் ஆய்வுக்கூட்டத்தில் அறிவித்து, அதை அவர் கலந்துகொள்ளும் கல்லூரி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ் இலக்கியக் கூட்டங்களிலும், நிறுவனங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அறிவித்துச் செய்தி வெளியிட்டு வருகிறார்.

இப் பணி அரசினால் முழுவீச்சில் செயற்படுத்தப்படுமேயானால் தமிழ் வளர்ச்சிக்கு இது ஒரு பொற்காலமாக அமையும் என்றே கூறலாம்.தமிழ்ப்பணியை முன்னெடுத்த திருமூலர் தன் வாழ்க்கையையே தமிழுக்கு ஒப்படைக்கும் வண்ணம்,
‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே’

என்று முழங்கினார். தமிழ் வளர்ச்சிக்கான பணியைத்தான் தமிழ் செய்தல் என்று கூறினார் என்றே கொள்வோம். இதேபோல் தமிழ் வளர்ச்சிக்கென நெடுநாளைக்குப் பிறகு இன்று இந்த அரசு இத் திட்டங்களைச் செயற்படுத்த வகைசெய்யுமானால், நெடுநாள் ஏங்கியிருக்கும் தமிழறிஞர்கள், தமிழ்உணர்வாளர்கள், தமிழ்மக்களுக்கு இப்போது உருவாகியுள்ள இப் பருவம் ஒரு நல்ல பருவம் என நம்பலாம்.

அரசே செய்யவேண்டும் என்றில்லாமல் தமிழ் வளர்ச்சியை நோக்கமாக வைத்து இயங்கும் உலகின் பல்வேறு தனி அமைப்புகளும், தமிழார்வமும் தமிழறிவும் பெற்றுள்ள பிற துறை தனியொரு அறிஞர்களும்கூட தமிழில் பலதுறைப் பணிகளையும் முன்னெடுத்துச் செய்யலாம்.

இன்றைக்கு ஆங்கில வளர்ச்சியென்பது உலகின் பல நாடுகளிலுமுள்ள பலதுறையறிஞர்கள் தங்கள் ஆய்வுப் படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டு குவித்ததால், அவர்களின் ஆய்வும் வளர்ந்தது. ஆங்கிலமும் வளர்ந்தது. ஆனால், அவ்வாறு தமிழை வளர்க்கத் தமிழர் மட்டுமே உள்ளனர்.

இன்று தமிழர்கள் உலகமுழுதும் பரவி பலநாடுகளிலும் பல்துறைகளிலும் பலரும் வல்லுநர்களாக உயர்ந்து விளங்குகின்றனர். அவர்களின் பல்துறை ஆய்வுப் படைப்புகளையும் தமிழர்களிடையே தமிழில் பகிர்ந்துகொண்டாலே அவர்களின் துறை ஆய்வுகள் உலகெங்கும் பரவும். தமிழும் அத்துறைகளில் வளம்பெறும். ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக வளர்ந்த மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் விளங்கும் வாய்ப்பை இன்றைக்குள்ள ஊடக வளர்ச்சியால் எட்டி விடலாம். இதனால் தமிழும் வளம்பெறும். தமிழினமும் வளர்ச்சி பெறும். அவர்களின் ஆக்கப்படைப்புகள் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைய அமைச்சர் உருவாக்குவதாக உறுதியளித்திருக்கும் தமிழ் வளர் மன்றங்கள் பயன்படுமாறு இருக்கும். மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரின் மதிப்புமிகு திட்டங்கள் நிறைவேறவேண்டுவோம் !

தமிழுக்கு வாய்த்த நல்ல பருவமாக இதை எண்ணுவோம். மீண்டும் திருமூலரின் வரியை நினைவிற்கொள்வோம். நாமும் பருவத்தே தமிழ் செய்வோம்!