Thursday, July 29, 2021

பேரகரமுதலியின் சிறப்புக்கூறுகள்

 

                                   


முனைவர் இரா.கு.ஆல்துரைசிறப்புநிலைத் தொகுப்பாளர்(ஓய்வு), 
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்.

 பேரகரமுதலியின் சிறப்புக்கூறுகள்                         

மூலத்தன்மை

            அகரமுதலியில் இடம்பெறும் சொற்கள், பொருள்கள் ஆகியன அவற்றிற்கே உரியனவாக மிக அருகியே அகரமுதலித் தொகுப்பாளர்களால் விளக்கப்படுகின்றன. சொற்களையும், பொருள்களையும் ஒன்று திரட்டுவது மட்டும் மூலத்தன்மை பொருந்திய அகரமுதலியாகாது அவற்றைக் கையாளும் முறை, வரிசைப்படுத்தும் ஒழுங்கு ஆகியனவே மூலத்தன்மை பொருந்திய அகரமுதலி என அழைப்பதற்கு ஏதுக்களாக அமைகின்றன (மோனியர் வில்லியம்சு 1872:முக.5). 

            ஒரு மொழியில் தொகுக்கப்படும் அகரமுதலிகளை மேற்போக்காக அவற்றின் அளவு அடிப்படையில் பேரகரமுதலிகள், சிற்றகரமுதலிகள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். பேரகரமுதலிகள் பல மடலங்களை அல்லது பல பகுதிகளைக் கொண்டனவாக அமையலாம். பொதுவாகச் சிற்றகரமுதலிகள் பேரகர முதலிகளை அடிப்படைகளாகக் கொண்டனவாக இருக்கும். அவ்வகையில் பேரகமுதலித் தொகுப்பு சிறப்பிடம் பெறுவதைப் பரவலாகக் காணலாம்.

கலைக்களஞ்சியச்செய்தி

            அகரமுதலியில் பெருமளவில் தனிச் சொற்களும் கூட்டுச்சொற்களும் உருப்படிகளாக இடம் பெறுகின்றன. அதேபோல் மரபிணைமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் போன்றனவும் இடம் பெறுகின்றன. இவ்வாறான சொற்களின் பொருள்களைத் தருவதே அகரமுதலியின் அடிப்படைப் பொருண்மையாகும். கலைக் களஞ்சியத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தும் அகரமுதலியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. என்றாலும் அகரமுதலிகளில் இடம்பெற்றிருக்க வேண்டிய செய்திகள் பல விடுபட்டுள்ளன என்று குறிப்பிடுகின்றனர். சான்று: ஞாயிறு என்னும் கிழமையைக் குறிக்கும் சொல்லுக்குக் கிழமையின்(வாரத்தின்) ஒரு நாள் என்று குறிப்பிடலாம். இதற்குமேல் கூடுதல் விளக்கமாகக் காரிக்கிழமைக்கும் திங்கள் கிழமைக்கும் இடைப்பட்ட நாள் என்று பொருள் கூறுவது அச்சொல்லின் பொருளை மேலும் விளக்கிக் காட்டுகின்றது. இதனுடன் ஒரு கோள் (சூரியன்) அடிப்படையில் பெயர் பெற்றது என்னும் செய்தியை இணைத்துசூரியன் கோள் அடிப்படையில் பெயர் பெற்ற காரிக்கிழமைக்கும் திங்கள் கிழமைக்கும் இடைப்பட்ட நாள் என்று பொருள் கூறுவது மேலும் விளக்கம் அளிப்பதாக இருக்கும். இவ்வகையில் சிற்றகர முதலிகளும் கலைக் களஞ்சியச் செய்திகளுடன் உருவாக்கப்படுகின்றன.

 

இலக்கியச் சொற்கள்

            முன்னர் வெளிவந்த அகரமுதலிகள் பெரும்பான்மை இலக்கியச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இலக்கியச் சொற்கள் அருகியே கிளைவழக்குகளை உள்ளடக்கியனவாக இருக்கும். தமிழைப் பொறுத்தவரை தொல்காப்பியர் காலத்திலேயே கிளை வழக்குகளின் இன்றியமையாமை காட்டப்பட்டுள்ளது. திசைச்சொற்கள் என்ற வட்டார வழக்குச் சொற்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இருந்தாலும் தமிழ் மொழியின் கிளைவழக்குகள் முழுமையாக அகரமுதலியில் இடம்பெறவில்லை என்ற குறைபாடு இன்றளவும் இருக்கிறது. கிளை வழக்குகள் உட்பட மொழி வழக்குகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் அகரமுதலியே முழுநிறைவான அகரமுதலியாக அமையும்.

            இலக்கியச்சொற்கள் என்று பொதுப்படையாகச் சொன்னாலும் தமிழ்போல் பழம் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில் எவ்வகை மாற்றமும் இல்லாமல் இன்றுவரை அப்படியே வழக்கிலிருக்கும் பழஞ் சொற்கள் என்றும் சொற்றிரிபு, பொருள்திரிபு ஆகியனவற்றுடன் மாறி வந்துள்ள சொற்கள் என்றும் இரு வகைகளைக் காணலாம். இதில் இரண்டாம் வகைக்குள் வருவனவற்றின் திரிபுகளைக் காட்டும் வகையில் அகரமுதலி அமைதல் பொருத்தமானது. இவ்வகைகளிலிருந்து வேறானது வழக்கிழந்த இலக்கியச்சொற்கள்.

வழக்குச்சொற்கள்

            இலக்கியச் சொற்கள் ஒரு மொழியின் இன்றியமையாத கூறுகளாக அமைகின்றன. அதே நேரத்தில் இலக்கிய ஆட்சிகள் மட்டும் ஒரு மொழியின் முழுத் தன்மையைக் காட்டுவதாக இருக்கா. பெருமளவில் இலக்கியம் அமைந்த மொழிகளிலும் சற்றொப்ப மூன்றில் ஒரு பங்கு தன்மையைத்தான் இலக்கிய ஆட்சிகள் கொண்டிருக்கும் என்று கணக்கிடுகின்றனர். அவ்வாறெனில் மொழியின் பெரும் பங்கு, அதாவது மூன்றில் இரண்டு பங்கு பேச்சுமொழி கொண்டிருக்கும் என்பது வெளிப்படை.

            பொதுவாக மொழியைக் கற்போருக்கு இலக்கிய ஆட்சிகளை மட்டும் அறிவது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. வெவ்வேறு சூழலில் இயங்கும் மொழியின் இயக்கத்தை அறிதல் தேவை. பெரும்பான்மையான அகரமுதலிகள் இத் தன்மைக்கு உரிய இடம் அளிப்பதில்லை. இந்நிலையில், இவ்வகை அகரமுதலிகள் மொழி கற்போருக்கு முழுப் பயன் உள்ளனவாக இருக்கா. பேச்சு மொழியில் ஆகுபெயர், உருவகம் போன்ற வகையில் பலவாறாகப் பொருள் விரிவு ஏற்படும்.

-டு: மாந்த உடலின் உச்சியில் அமைந்துள்ள உறுப்பு அல்லது விலங்கு உடலின் முன்னதாக அமைந்துள்ள உறுப்பு தலை. இச்சொல் முடி (தலை வாருதல்),  ஆள் (தலைக்கட்டு), ஒரு குழுவை வழி நடத்துபவன் (தலைவன்), முதன்மை (தலைமாணாக்கன்),  அறிவு (தலை கெட்டு விட்டது) என்பன போன்று வளர்ச்சி கொண்டிருக்கும். இதுபோன்ற பொருள் வளர்ச்சிகள் முழுமையையும் காட்டுவதற்குப் பேச்சு மொழியை நாட வேண்டியிருக்கும்.

            அகரமுதலியின் நோக்கம் அது அமையும் மொழியின் நலன்கள் அனைத்தையும் விளக்க வேண்டும் என்பதாகும். ஆகையால் குறிப்பிட்ட மொழியைப் பற்றிய வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம் போன்றன தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் அம்மொழி அகரமுதலியில் இடம்பெறவேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பு. அகரமுதலியில் அலகாகக் கொள்ளப்படும் சொற்களின் வாயிலாக இச்செய்திகள் அனைத்தையும் விளக்க வேண்டும். ஆகையால் ஒரு சில சொற்களின் கீழ் நெடிய விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. என்றாலும் இவ்வாறான விளக்கங்கள் ஒரு சில இடங்களில்தான் இடம் பெறும். மற்ற இடங்களில் வேர் காட்டும் அளவில் அல்லது வேருடன் சிறு விளக்கம் மட்டும் இடம்பெற்றால் போதுமானது.

கட்டுருபன்

            அடிப்படையில் அகரமுதலி சொல்லைப் பற்றியது. ஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் உள்ளடக்கியது அம்மொழிச் சொற்களஞ்சியம். ஒவ்வொரு சொல்லும் தனித்தனியான உருப்படிகள். இருந்தாலும் ஒவ்வொரு சொல்லும் பிற சொற்களோடு சேர்ந்து இயங்கும் தன்மை கொண்டன. ஒரு சொல் மற்ற சொற்களோடு சேராமல் தனியான இயக்கத்தைக் கொண்டிருக்காது. ஒரு சொல் குறிப்பிட்ட பொருள், குறிப்பிட்ட ஒலி வடிவம், குறிப்பிட்ட இலக்கண இயக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

            பெரும்பாலும் அகரமுதலியில் தனியாக இயங்கும் சொற்களே இடம்பெறும். ஆனால் கட்டுருபன்(bound morpheme)கள் தனியான இயங்கும் தன்மை இல்லாதன. அவை பிற சொல்லுடன் சேர்ந்தே மொழியில் ஆளப்படுகின்றன. அவை தனியாக இயங்கும் தன்மை இல்லாதனவாக இருப்பதால் பல அகரமுதலிகளில் இடம்பெறுவதில்லை. அகரமுதலிகள் உருபன்கள் அல்லது பொருள் உணர்த்தும் வடிவங்கள் அனைத்துக்கும் பொருள் கொடுக்க வேண்டும். ஆகையால் கட்டுருபன்களும் அகரமுதலியில் இடம்பெற வேண்டும். ஆக்க ஈறுகள், பின்னொட்டுகள், முன்னொட்டுகள், இடை ஒட்டுகள் போன்று கட்டுருபன்களும் அகரமுதலியில் இடம்பெறவேண்டும். இவற்றின் பொருள்களுடன் தேவையான இடங்களில் எடுத்துக்காட்டுகள் தருவதும் விளக்கம் பெறவைக்கும்.

ஒலிப்பு

            பழமையான இலக்கியங்களைக் கொண்டும் இன்றளவில் வழக்கிலிருக்கும் மொழியின் சொற்களை உரிய ஒலிப்பு முறையில் பதிவு படுத்த வேண்டியது தேவை. அம்மொழியின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரமான ஒலிப்பு வகை பதிவு பெறவேண்டும். சொல்லின் ஒலிப்புமுறை மாறியிருக்கக் கூடும். ஆகையால், இன்று வழக்கிலிருக்கும் ஒலிப்பு முறையை வைத்துப் பழைய இலக்கியச் சொற்களைப் பதிவு செய்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அதாவது பல நேரங்களில் உரிய ஒலிப்பு முறையைக் காட்டுவதாக இருக்காது. குறிப்பாப் பிறமொழி யாளர்களுக்கு உரிய வகையில் ஒலிப்பு முறைக்கான பதிவு இல்லாமல் போனால் தவறான ஒலிப்புக்கு இட்டுச்செல்லும்.

பொருள்

            பொதுவாக இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்கள் அனைத்தையும் அகரமுதலிக்கு, குறிப்பாகப் பேரகரமுதலிக்கு எடுத்துக் கொள்ளப் பெறும். ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட பொருளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருந்தால் அவற்றுள் ஏதாவது ஒன்றினை மட்டும் கொள்ளும் முறையை பின்பற்றினால் போதுமானது. சொல் குறிக்கும் பொருள் தொடர்பாக உரையாசிரியர்கள் கருத்துகள் மாறியிருக்குமானால் அவற்றைப் பதிவுக்கு கொள்ளலாம்.

            இலக்கியத்தில் இடம் பெற்ற அருஞ்சொற்கள் அல்லது விளக்கம் தர வேண்டிய சொற்கள் ஆகியன பற்றி நூல்களிலும் இதழ்களிலும் மலர்களிலும் வந்துள்ள அறிஞர்கள் கட்டுரைகளைப் பொருள் வரையறைக்கும் வேர் விளக்கத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

            பொருளியைபுச்  சொற்களஞ்சிய (thesaurus) முறையில் ஒரு சொல் ஒரு பொருளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இலக்கியங்களில் இடம் பெற்றிருந்தால் அவை அனைத்தையும் தொகுக்கும் முறையைப் பேரகரமுதலி மேற்கொள்ள வேண்டியதில்லை. எனினும் பொருள் தெளிவுக்காக ஒரு சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மேற்கோள்கள் ஒரே பொருளுக்குக் கொடுக்கலாம்.

கடன்சொல்

            பிறமொழியிலிருந்து கடன் பெற்ற சொல் தன் வடிவத்தில் மாறிய தன்மையுடன் வழங்கி வரலாம். அவ்வாறான இடங்களில் மூலமொழியின் வடிவத்தையே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் பொருள் இல்லை. அது மாறி வழங்கும் வடிவத்தைத் தான் கொடுக்க வேண்டும். பின்னர் வேர் விளக்கம் சொல்லும்போது மூலமொழியின் வடிவத்தைக் காட்டி அதன் திரிந்த நிலையைக் காட்டலாம்.

            பிறமொழிச் சொற்களை அகரமுதலி உருப்படிக்குத் தெரிவு செய்யும்போது நுணுகி ஆராய்ந்து தெரிவு செய்ய வேண்டி இருக்கும். வழக்குச் சொற்கள் என்னும் பெயரில் பல அயன் மொழிச் சொற்கள் இடம் பெற்றுவிடுகின்றன. வழக்கு என்று சொல்வது சரியான வரையறை இல்லாமல் ஆளப்படுகிறது. முறைமன்றம், அலுவலகம் போன்ற குறிப்பிட்ட இடங்களில் வழக்குச் சொற்களாக இருப்பவை பொதுமக்களிடையே வழக்கில் இருக்கா. அதேபோல் ஒரு காலத்தில் வழக்குச் சொற்களாக இருப்பவை பிறிதொரு காலத்தில் வழக்குச் சொற்களாக இருக்கா. தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இடைக்காலத்தில் வரம்பிறந்து வடமொழிச் சொற்களைக் கடன் கொண்டது. ஆனால் சென்ற நூற்றாண்டு முதல் அந்தப்போக்கு முற்றிலும் மாறிவருகிறது. வடமொழிச் சொற்களுக்கு இணையான இயன்மொழிச் சொற்கள் பயன்படுத்துவது ஊக்கம் பெற்று வருகிறது

            பேரகரமுதலி பழஞ் சொற்கள், புத்தாக்கச் சொற்கள், அரிதாகப் பயன்படுத்தும் சொற்கள், பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் சொற்கள், இலக்கியத்தில் மட்டும் இடம்பெற்றுள்ள சொற்கள், பேச்சு வழக்கில் மட்டும் உள்ள சொற்கள் என்றாற் போன்ற அனைத்து வகைச்சொற்களும் இடம்பெறும் வகையிலும் அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல், பொருளாதாரம் என்றாற் போன்ற பலதுறைப்பட்ட சொற்களும் இடம்பெறும் வகையிலும் வேண்டிய இடங்களில் கலைக் களஞ்சியச் செய்திகள் இடம் பெறும் வகையிலும் கட்டுருபன், இலக்கணக் குறிப்பு ஆகியவற்றுடனும் அமைதல் சிறப்பானதாகும்.

குறிப்புதவி: Monier Williams Monier 1872, Sanskrit English Dictionary, Oxford, Clarendon press